தமிழக சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பெண்கள் குறித்து பேசியிருந்தார். அதில் பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசியிருந்தார்.
இந்த பேச்சு தொடர்பாக நடிகையும் பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு நடிகை, ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். அவர் குறிவைத்து தாக்கப்பட்டார். அவதூறு பேசுவதிலும் ஒருவரின் நற்பெயரைக் களங்கப்படுத்துவதிலும் எப்போதும் பெண்களே குறிவைக்கப்படுகிறார்கள்” என்றார். இவர் நடிகை திரிஷாவைத்தான் சொல்கிறார் என கூறப்படுகிறது.
மேலும், “இது இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுவதும் நடக்கும் ஒரு விஷயம். வேலை செய்யும் பெண்கள், சாதித்த பெண்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரம் மிக்க பதவிகளில் உள்ள பெண்கள் ஆகியோரின் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருக்கிறது” என்றார்.
