ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ’80களின் ரெட்ரோ ஏஐ புகைப்பட டிரெண்டிங்’கில் இணைந்து தனது ஏஐ படத்தைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தற்சமயம் சாட்ஜிபிடி உட்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் மூலம், பயனர்கள் தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-ஆம் ஆண்டுகளில் இருப்பது போல மாற்றியமைத்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
குறிப்பாக நடிகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது புதிய படங்களை, ஏஐ மூலமாக 1980 களின் ரெட்ரோ படங்களை உருவாக்கி அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஏஐ மூலம் 1980 களின் ரெட்ரோ புகைப்படத்தை, தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், அவர் நேர்த்தியான நீல நிற கோட், சூட், வெள்ளை நிறச்சட்டை மற்றும் சன்கிளாஸ் அணிந்து 80களின் திரைப்பட நடிகரைப் போன்ற கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
