துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: உறுதி செய்தது எச்.டி. ஹூண்டாய்

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை தமிழக அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவிடம் நடத்திய பேச்சில், எச்.டி.ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளது. விரிவான தொழில்நுட்ப திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு இத்திட்டம் முன்னேறியுள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சி., துறைமுகம் அருகில், 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசுடன், தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹெச்.டி.ஹூண்டாய் நிறுவனம், 2025ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அந்நிறுவனத்தின் எச்.டி., கே.எஸ்.ஓ.இ., கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உள்ளது.

தமிழகத்தில், இந்தாண்டு ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந் நிறுவனத்தின் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டது. எச்.டி., ஹூண்டாயின் முதலீட்டை தக்க வைக்க தமிழக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.

எச்.டி., கே.எஸ்.ஓ.இ.,நிறுவனத்தின் சன்ஜுன் ஹாங் தலைமையி லான மூத்த குழு, கடந்த 1ம் தேதி முதல், ஒரு வாரம் துாத்துக்குடியில் முகாமிட்டு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

அக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, செயலர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தி யது. அப்போது, தமிழகத்தில் திட்டத்தை முன்னெடுத்து செல்வதாக, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அறிக்கை : இதுகுறித்து, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கையில், துாத்துக்குடியின் கனவு தற்போது செயலுக்கு வந்துள்ளது. எச்.டி.ஹூண்டாய் கப்பல் கட்டும் தளத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுகளும், விரிவான திட்ட பணிகளும் தற்போது முழுவீச்சில் நடக்கிறது. கப்பல் கட்டும் தளம் அமைப்பதில், எச்.டி.ஹூண்டாய் தன் முதன்மையான திட்டத்தை முழு நம்பிக்கையுடன் செயல்படுத்தி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்கு கையாளல்

துாத்துக்குடி துறைமுகத்தில் ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு புதிய உச்சம் எட்டப்பட்டது. கடந்த பிப்ரவரியில் ஒரே நாளில் 2 லட்சத்து 16,631 டன் சரக்குகள் கையாளப்பட்டது இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. இதுகுறித்து துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறுகையில், சரக்குகள் கையாளுதலில் துறைமுகம் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் துறைமுகம் 35.35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது என்றார்.

Source link