‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா(90) வயது மூப்பு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவு தமிழ் சமூககத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரையில் சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. முன்னதாக மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சாலமன் பாப்பையாவின் உடல் இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து பிட்டுத்தோப்பு பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்ற நிலையில் அங்கிருந்து தத்தனேரி மின்மாயனம் பகுதிக்கு சாலமன் பாப்பையாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் முன்னிலையில் சாலமன் பாப்பையா உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்காமல் கெளரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்காமல் சாலமன் பாப்பையாவுக்கு, ‘Guard of Honour’ எனப்படும் கெளரவ மரியாதை அவருக்குச் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
