ரியாத்: ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா தனது மிக முக்கியமான எண்ணெய் குழாயை மூடியிருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் நெருக்கடியும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்திருக்கிறது.
ஈராக் நாட்டின் எல்லையிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள், சவுதியின் மிக முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் வழித்தடத்தை தாக்கியுள்ளன. எனவேதான் சவுதி வேறு வழியின்றி எண்ணெய் குழாய்களை மூடியிருக்கிறது.
இந்த தாக்குதலால் சிலருக்கு காயங்களும், சிறிய அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பதாக சவுதி வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 4-5% வரை இந்த ஒரே ஒரு பைப்லைன் மூலமாக நடைபெற்று வந்தது என்பதுதான். இந்த ட்ரோன் தாக்குதல் ஈரான் எல்லையை ஒட்டியுள்ள ஈராக்கின் மைசான் மாகாணத்திலிருந்து நடத்தப்பட்டிருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தனது நாட்டின் எல்லையை பயன்படுத்தி, அண்டை நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஈராக் பிரதமர், உடனடியாக அநத மாகாணத்தின் ராணுவ கமாண்டரை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இது குறித்து தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக சவுதி இருக்கிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பிரச்சனை பூதாகரமாக வெடித்திருப்பதால், அந்த பாதையை தவிர்த்துவிட்டு, இந்த 1,200 கி.மீ நீளம் கொண்ட கிழக்கு-மேற்கு பைப்லைன் மூலம் கச்சா எண்ணெய்யை விநியோகித்து வந்தது.
தற்போது இந்த பைப்லைன் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதி மற்றும் பாப் அல்-மந்தேப் ஜலசந்தியின் பெரும்பாலான கடற்கரை பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறித்து பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன. இந்த சம்பவங்கள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஜூலை மாதத்திற்கு பிறகு இப்போது முதன்முறையாக ஒரு பேரல் 100 டாலரை தாண்டியிருக்கிறது.
ஈராக்கின் இந்த தாக்குதலுக்கு, சவுதி ராணுவ ரீதியில் எந்த பதிலடியையும் கொடுக்கவில்லை. மாறாக, தனது மண்ணிலிருந்து மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க ஈராக் எடுத்துள்ள முயற்சியை சவுதி பாராட்டியிருக்கிறது. இருப்பினும் தனது குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உரிமை உள்ளதாக சவுதி தெரிவித்திருக்கிறது.
