அமெரிக்காவை முறைத்து.. இஸ்ரேலை வளைத்து.. பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா செய்த மாஸ்டர் பிளான் என்ன?

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கூட்டறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 11 நாடுகளையும் ஒரே கருத்தின் கீழ் கொண்டு வந்து, ஒரு கூட்டறிக்கையை வெளியிடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக, இஸ்ரேல் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவின் பெயர் நேரடியாகச் சொல்லப்படவில்லை என்றாலும், அதன் பொருளாதாரத் தடைகளுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தக் கூட்டறிக்கையில் மிகவும் கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் குறித்து பேசப்பட்டாலும், அமெரிக்காவின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

அதேபோல், அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டாலும், ஈரான் நாட்டின் பெயர் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால், இஸ்ரேல் மட்டும் காசா மற்றும் லெபனான் விவகாரங்களில் பல இடங்களில் வெளிப்படையாகப் பெயரிட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் விவகாரத்தில் ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்த போதிலும், அனைவரையும் சமாதானப்படுத்தி இந்த அறிக்கையை இந்தியா தயாரித்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. சீனாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் இந்தியா ஒரு சரியான பாலமாகச் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பெயர் நேரடியாக இடம்பெறாவிட்டாலும், சர்வதேச சட்டங்களுக்கு எதிராகத் தனி ஒரு நாடாகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பது கண்டிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏழை எளிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான தடைகளை மனதில் கொண்டே இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு மாறாக வரியும், கூடுதல் வரிகளும் விதிப்பதையும் பிரிக்ஸ் நாடுகள் எச்சரித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு பிரிக்ஸ் நாடுகளின் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த மறைமுக எச்சரிக்கை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்ததை இந்தியா நியாயமற்றது என்றும் கூறி தனது தேசிய நலனைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் வான்வழித் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்ற ஈரானின் வாதத்திற்கு இந்தப் பிரிக்ஸ் அறிக்கை மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஈரானின் அதிபரும் கை கோர்த்துப் பேசியது இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே மோதல்கள் இருந்தபோதிலும், மாநாட்டின் மூலமாக அந்த நாடுகளின் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசியது அமைதிக்கு வழிவகுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில் ஈரான் இணைவதற்கும் பிரிக்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

மறுபுறம், காசா போரில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் குறித்தும், பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிராகவும் பிரிக்ஸ் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 1967-ன் எல்லைகளுக்கு உட்பட்ட தனி பாலஸ்தீன நாட்டை ஆதரிப்பதாகவும், கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் விவகாரத்தில், அங்கு நிலவும் போர் நிறுத்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், இஸ்ரேல் தனது படைகளை லெபனான் பிரதேசத்தில் இருந்து முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்றும் நேரடியாகக் கோரப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா எப்போதும் எந்த ஒரு அணியும் சாராத நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி வருவதாகக் கருதப்பட்டது. டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவின் நடவடிக்கைகளால் அந்த உறவில் சிறு உரசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியா அனைத்து தரப்பினருடனும், அதாவது ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உறவையும் பேச்சுவார்த்தையையும் தொடர்ந்து பேணி வருகிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரு அமைப்பாகும். இதன் மூலம் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சரியான சமநிலையைப் பராமரிக்கிறது. எனினும், பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா மிக ஆழமாகச் செல்வது எதிர்காலத்தில் சில சவால்களைத் தரலாம் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனா தனது சொந்தப் பெருமைக்கும் ஆதிக்கத்திற்கும் பிரிக்ஸைப் பயன்படுத்திக் கொள்ள முயலலாம் என்றும், இந்தியாவின் எதிர்காலம் மேற்கு நாடுகளுடனான கூட்டாட்சியில்தான் உள்ளது என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட 11 நாடுகளையும் ஒரே மேடையில் அமர வைத்து, ஒருமித்த கருத்துடன் கூட்டறிக்கையை வெளியிட்டதன் மூலம் இந்தியா தனது ராஜதந்திர திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது. இதன் மூலம் இந்தியா எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இருக்காமல், தனது சொந்த நலனுக்கே முதலிடம் அளித்துச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.