டாக்ஸி எங்கேன்னு இனி தேட வேண்டாம்: சென்னை ஏர்போர்ட்டில் புதிய பிக்-அப் பிளாசா இன்று திறப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய பிக்-அப் பிளாசா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு காணொலி மூலம் இதைத் திறந்து வைக்கிறார்.

விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்கு வெளியே இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் சுமார் ரூ.22.88 கோடி செலவில் இந்தப் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த டாக்ஸி அல்லது பிற வாகனங்களை எளிதாகச் சென்றடைவதுடன், விமான நிலையத்திற்கு வெளியே வாகன இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட காலக்கெடுவுக்குப் பிறகும் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை இந்த வசதி திறக்கப்படாமல் இருந்தது.

28 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிற்கலாம்

 டெர்மினல் 1-க்கு சுமார் 30 மீட்டர் தொலைவில் இந்தப் பிளாசா அமைந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்து வரும் பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று தங்களுக்கான வாகனத்தைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

பிளாசாவில் சுமார் 7 மீட்டர் அகலத்தில் 3 போக்குவரத்து பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏ மற்றும் பி பாதைகள் பயணிகளை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களுக்கும், விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும். சி பாதை வெளியேறும் பாதையாக செயல்படும். வாகனங்கள் சீராகச் செல்லும் வகையில் யு-டர்ன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளை அழைத்துச் செல்லும் இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் சுமார் 28 வாகனங்கள் நிறுத்த முடியும்.

எந்த வாகனங்களுக்கு அனுமதி?

முதற்கட்டமாக ஊபர், ஓலா, ரேபிடோ, ஃபாஸ்ட்டிராக், ரெட் டாக்ஸி, டபிள்யூடிஐ மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட டாக்ஸிகள் இந்தப் பிளாசாவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

புதிய நடைமுறை சீராகச் செயல்படத் தொடங்கிய பிறகு, மேலும் சில மஞ்சள் நிறப் பதிவு எண் கொண்ட வணிக வாகனங்களுக்கும் அனுமதி வழங்குவது குறித்து விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாசாவில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு பகுதியில் ஒரே நேரத்தில் சுமார் 150 பயணிகள் அமர முடியும். பயணிகளுக்காக இருக்கைகள் மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும் அல்லது அறிவிக்கப்படும்.

இந்தப் பிளாசாவின் திறப்பு விழா முதலில் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறுவதாகவும், அமைச்சர் நேரில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சி பின்னர் ரத்து செய்யப்பட்டது.

தற்போது பிக்-அப் பிளாசா பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வெளியே நீண்ட காலமாக நிலவி வரும் வாகன நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்றும், பயணிகளை அழைத்துச் செல்ல தனி வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link