பிரிக்ஸ் அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (12.09.2026) தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பில் மொத்தம் 11 நாடுகள் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் தலைமையேற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தி வரும். அந்த வகையில் நடப்பாண்டில் இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன், தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், இம்மாநாட்டின் 2வது நாள் கூட்டம் இன்று (13-09-26) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, 140 அம்சங்களைக் கொண்ட 45 பக்க பிரகடன ஆவணம் வெளியிடப்பட்டு அது அனைத்து தலைவர்களாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில், உலகளவில் நிலவி வரும் போர், ஆக்கிரமிப்பு பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு நாடுகளுக்கு இடையே மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் பிரகடனத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இது பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த பிரகடனத்தின் முலம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதல், ஈரானின் அணு உலைகள், சிவில் கட்டமைப்புகள் மீதான அமெரிக்காவின் திட்டமிட்ட தாக்குதல் உள்ளிட்ட தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதனை தொடர்ந்து, அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை ஐ.நா. சாசனப்படி உறுதிசெய்ய வேண்டும் என்றும் தூதரகப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை எட்ட வேண்டும் என அமெரிக்காவின் பெயர் குறிப்பிடாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
