ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், ராஜுக்கள் சமூகத்தில் அதிகளவு கலப்பு திருமணங்கள்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிராமணர்கள், கிறிஸ்துவர்கள், ராஜுக்கள் சமூகத்தில் அதிகளவு கலப்பு திருமணங்கள் நடந்துள்ளதாக அங்கு நடத்தப்பட்ட ஜாதிவாரி சர்வே வாயிலாக தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ‘சமூக – பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் ஜாதி வாரியான சர்வே நடத்தப்பட்டது. 2024 -25ம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிக்கைகளை, தெலுங்கானா அரசு கடந்த 15ம் தேதி வெளியிட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தலைமையிலான, ‘சுதந்திரமான நிபுணர் பணிக் குழு’ வெளியிட்ட அறிக்கையில் கலப்பு திருமணம் தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

ஐயர்கள் மற்றும் ஐயங்கார்களை உள்ளடக்கிய பிராமணர் சமூகத்தில் அதிகளவு கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. கலப்பு திருமணங்களில், 12 சதவீதம் இந்த பிரிவினரிடையே பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக பட்டியல் இனத்தவர்களில் இருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே 9.9 சதவீத கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன.

அடுத்தாக, ராஜுக்கள் பிரிவில் 8.7 சதவீதம் கலப்பு திருமணம் நடந்துள்ளது. பழங்குடியினர், சீர்மரபினர், நாடோடி பழங்குடியினர் அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள கங்கிரெட்லவாரு மற்றும் அக்னிகுல சத்ரியர்கள் ஆகியோரிடையே கலப்பு திருமணம் அதிகளவில் நடந்துள்ளது. எனினும், வேளமா மற்றும் ரெட்டி போன்ற ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களிடையே கலப்பு திருமண விகிதம் மிக குறைவாக உள்ளது.

இது, மாநிலத்தின் சராசரி விகிதத்தை விட மிகவும் குறைவாக உள்ளது. அதேபோல், பழங்குடியினத்தை சேர்ந்த கோலம், மாலி, கோண்ட் போன்ற பிரிவினரிடையே கலப்பு திருமணங்களின் விகிதம் மிக குறைவாக உள்ளது. புவியியல் ரீதியாக இந்த பிரிவினர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதே இதற்கு காரணம். பிராமணர்கள் பெரும்பாலும் நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். அங்கு, திருமணம் சார்ந்த விஷயங்களில் ஜாதி சார்ந்த தடைகள் குறைவாக இருப்பதே, இந்த சமூகத்தில் கலப்பு திருமணம் அதிகரிக்க காரணம்.

கலப்பு திருமணங்கள் சமூக தடைகள் வலுவிழந்து வருவதையும், சமூக இயக்கங்கள் வளர்ந்து வருவதையும் காட்டுகின்றன. குறிப்பாக, தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் சுதந்திரமாக செயல்படுவதை இது உணர்த்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link