சென்னை: பரம்பரை பாகப்பிரிவினை தீர்வு பத்திரத்தை விடுவிக்க, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சார் பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தர் ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர், தன் பரம்பரை சொத்துக்கான பாகப்பிரிவினை தீர்வு பத்திரத்தை விடுவிக்க, காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த, 2019ல் விண்ணப்பித்திருந்தார்.
அதை பரிசீலனை செய்து தீர்வு பத்திரத்தை விடுவிக்க, அப்போது சார் பதிவாளராக இருந்த தேவராஜ், 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். அந்த தொகையை, ஆவண எழுத்தர் சந்திரமோகனிடம் ஒப்படைக்குமாறும் கூறியுள்ளார். இதுகுறித்து சசிகுமார், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் தெரிவித்தபடி, தேவராஜ் மற்றும் சந்திரமோகன் ஆகியோரிடம், லஞ்ச பணம் கொடுக்க சம்மதம் தெரிவிப்பதாக, சசிகுமார் கூறியுள்ளார். அதன்படி, அவரிடம் தேவராஜ், சந்திரமோகன் ஆகியோர் லஞ்சப் பணத்தை வாங்கியபோது, இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, வேலுார் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தேவராஜ் மற்றும் சந்திரமோகன் ஆகியோருக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
