பெங்களூரு:தார்வாட் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலரான, பா.ஜ.,வை சேர்ந்த யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட, 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கர்நாடகாவின் தார்வாட் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலர் யோகேஷ் கவுடா. பா.ஜ.,வை சேர்ந்த இவர், மாவட்டத்தில் வளர்ந்து வரும் இளம் தலைவராக இருந்தார். கடந்த, 2016 ஜூன் 15ம் தேதி காலை, தார்வாட்டின், சப்தாபுரா லே – அவுட்டில் உள்ள ஜிம்மில் இருந்தார். அப்போது, ஜிம்முக்குள் நுழைந்த மர்ம கும்பல், அரிவாள், இரும்புத்தடி போன்ற ஆயுதங்களால் யோகேஷ் கவுடாவை தாக்கி கொலை செய்து தப்பியோடியது.
இந்தச் சம்பவம் மாநில அளவில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்றைய முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது.
அதன்பின், சி.பி.ஐ., தீவிரமாக விசாரித்ததில், கொலையில் வினய் குல்கர்னிக்கு தொடர்பிருந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே, கொலை வழக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், யோகேஷ் கவுடா கொலையில் வினய் குல்கர்னி உட்பட பலருக்கு தொடர்பு உள்ளது என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், இம்மாதம், 15ம் தேதி வழக்கில் இருவரை தவிர, 19 பேரும் குற்றவாளிகள் என, தீர்ப்பளித்தது. நேற்று தண்டனையை அறிவித்தது. அதில், வினய் குல்கர்னி உட்பட, 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார். கைதான, 21 பேரில், நால்வரை தவிர, 17 பேருக்கும் தண்டனை கிடைத்துள்ளது.
