துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஜோன், சௌத் ஜோன் ஆகிய அணிகள் சென்னையில் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஈஸ்ட் ஜோன் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஈஸ்ட் ஜோன் அணியில், பேட்டர்கள் மிரட்டலாக செயல்பட்டு ரன்களை குவித்தனர். கேப்டன் இஷான் கிஷன் 334 பந்துகளில் 30 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 270 ரன்களை குவித்து அசத்தினார். மேலும், குமார் குஷக்ராவும் 101 (132) ரன்களை எடுத்து, ஸ்கோரை உயர்த்தினார்.
அபிமன்யு ஈஸ்வரன் 72 (86), வைபவ் சூர்யவன்ஷி 44 (37), ஷிகர் மோகன் 85 (120), அனுகுல் ராய் 45 (98), குரைஷி 40 (91) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், ஈஸ்ட் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸில் 708/10 ரன்களை குவித்தது.
சௌத் ஜோன் இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய சௌத் ஜோன் அணியில், தேவ்தத் படிக்கல் 104 பந்துகளில் 62 ரன்களை அடித்த நிலையில், கேப்டன் திலக் வர்மா 211 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 99 ரன்களை சேர்த்து, சதத்தை தவறவிட்டார். மிலிந்த் குமார் 43 (68), நாராயண் ஜெகதீசன் 32 (42) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை அடித்தார்கள். இப்படி, எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தினால், சௌத் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸில் 336/10 ரன்களை மட்டுமே எடுத்து, 372 ரன்கள் பின்தங்கியது.
ஈஸ்ட் ஜோன் வெற்றி: 372 ரன்கள் அபார முன்னிலையை பெற்ற ஈஸ்ட் ஜோன் அணி, சௌத் ஜோனுக்கு பாலோ ஆன் கொடுக்கவில்லை. கடைசி இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில், ஈஸ்ட் ஜோன் அணி, அந்த இரண்டு நாட்களிலும் முழுமையாக பேட்டிங் ஆடி, 388/7 ரன்களை எடுத்து, போட்டியை டிரா செய்தது.
ஷிகர் மோகன் 52 (85), கேப்டன் இஷான் கிஷன் 80 (98), குமார் குஷக்ரா 46 (75), குரேஷி 116 (190), அனுகுல் ராய் 64 (112) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்தியாவில், உள்ளூர் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில், முதல் இன்னிங்ஸில், எந்த அணி முன்னிலை பெற்றிருந்ததோ, அந்த அணியை வெற்றிபெற்ற அணியாக அறிவிக்கப்படும். இதனால், ஈஸ்ட் ஜோன் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டு, கோப்பை வழங்கப்பட்டது. மேலும், இறுதிப் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய இஷான் கிஷனுக்கு, ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இத்தொடரில், இஷான் கிஷன், 3 போட்டிகளில் 409 ரன்களை குவித்தபோதும், 2 போட்டிகளில் 266 ரன்களை அடித்த சௌத் ஜோன் அணிக் கேப்டன் திலக் வர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இத்தொடரில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வைபவ் சூர்யவன்ஷி, 3 போட்டிகளில் 192 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும், பந்துவீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஹர்ஷ் துபே, ஒரேயொரு போட்டியில் விளையாடியிருந்தாலும், அதில் 8 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
