ஓய்வுக்கால சேமிப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மூலம் தொடரலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா என்ற கேள்வி பல சம்பளதாரர்களிடையே உள்ளது. இந்த நிலையில், இ.பி.எஃப். மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் இடையேயான முக்கிய வித்தியாசங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்ட வீடியோவில் விளக்கியுள்ளது.
இ.பி.எஃப்.ஓ-வின் விளக்கப்படி, இ.பி.எஃப். மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் இரண்டுமே நீண்டகால நிதித் திட்டமிடலுக்கு உதவினாலும், அவற்றின் நோக்கமும் செயல்பாடும் முற்றிலும் வேறுபட்டவை.
இ.பி.எஃப். கட்டாயம்; மியூச்சுவல் ஃபண்ட் விருப்பம்
இ.பி.எஃப். என்பது சட்டப்படி செயல்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டம். EPF சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக உறுப்பினராக இருக்க வேண்டும். இதில் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% தொகையும், அதே அளவு தொகையை முதலாளியும் செலுத்த வேண்டும்.
ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முழுக்க முழுக்க தனிநபரின் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் நிறுவனத்தின் சார்பில் எந்தவித பங்களிப்பும் கிடையாது.
இ.பி.எஃப். கணக்கை எப்போது வேண்டுமானாலும் மூட முடியாது
EPF-ன் முக்கிய நோக்கம் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதாகும். எனவே, தேவையான விதிமுறைகளைத் தவிர இ.பி.எஃப். கணக்கை விருப்பப்படி மூட முடியாது.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள், தங்களின் முதலீட்டை தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுக்கலாம்.
EPF or Mutual Funds? 🤔
Before withdrawing your EPF savings, take a moment to understand why EPF may be the better choice for your future.Tap on the link to know more-https://t.co/AhJH8h0ACX#EPFO#EPFOWithYou#HumHainNapic.twitter.com/34AyB1JhEt
— EPFO (@officialepfo) July 22, 2026
வருமானம் எப்படி?
இ.பி.எஃப்-க்கு அரசு ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதத்தை அறிவிக்கிறது. அதன்படி சேமிப்புத் தொகைக்கு வட்டி கிடைக்கும். மாதந்தோறும் கட்டாய சேமிப்பு நடைபெறுவதால், ஓய்வுக்கால நிதி சீராக உருவாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் பங்குச்சந்தை நிலவரத்தைப் பொறுத்தது. சந்தை உயர்ந்தால் அதிக லாபம் கிடைக்கலாம்; சரிந்தால் இழப்பும் ஏற்படலாம். எனவே, இதில் முதலீட்டு ஆபத்து உள்ளது.
வரிச்சலுகை
இ.பி.எஃப். ஓ-வின் தகவலின்படி, EPF-ல் செலுத்தப்படும் பங்களிப்பு, அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் தகுதியான விதிமுறைகளின் கீழ் பெறப்படும் தொகை ஆகியவை வரிச்சலுகை பெறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் லாபத்திற்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படி மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) விதிக்கப்படலாம்.
ஓய்வூதியமும் காப்பீடும்
இ.பி.எஃப். உறுப்பினர்களுக்கு இ.பி.எஸ். (EPS) மற்றும் இ.டி.எல்.ஐ. (Employees’ Deposit Linked Insurance) திட்டங்களின் பலன்களும் கிடைக்கும்.
ஓய்வுபெற்ற பிறகு தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும், உறுப்பினர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியமும், இ.டி.எல்.ஐ. திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் வரை காப்பீட்டு பலனும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மியூச்சுவல் ஃபண்டில் இதுபோன்ற ஓய்வூதிய அல்லது சமூகப் பாதுகாப்பு வசதிகள் இல்லை. முதலீட்டாளர் இறந்தால், அவரது முதலீட்டு மதிப்பு மட்டுமே வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
எது பாதுகாப்பானது?
இ.பி.எஃப்.ஓ-வின் கருத்துப்படி, இ.பி.எஃப். என்பது ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும். அரசு அறிவிக்கும் வட்டியுடன் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு போன்ற கூடுதல் பலன்களும் இதில் கிடைக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் நீண்டகாலத்தில் அதிக வருமானம் தரும் வாய்ப்பு இருந்தாலும், அது சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எனவே, அதிக லாப வாய்ப்புடன் அதிக ரிஸ்கும் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதி நிபுணர்களின் கருத்துப்படி, பாதுகாப்பான ஓய்வுக்கால சேமிப்புக்கு இ.பி.எஃப். முக்கிய அடித்தளமாக இருக்கும். அதேசமயம், நீண்டகால செல்வ உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் தங்களின் ஆபத்து ஏற்கும் திறனைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வது நல்ல திட்டமாக இருக்கலாம்.
