அடிக்கடி தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; மாணவி எடுத்த விபரீத முடிவு!

அரசுப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்த கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஜெகதீஷன் என்பவர் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லிப் பூச்சி மருந்தை எடுத்து நேற்று அருந்தியுள்ளார். இதில் மயக்கமடைந்த அந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ஆசிரியர் ஜெகதீஷன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link