ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தொடர் விடுமுறைகளால் வங்கி சேவைகள் கடும் பாதிப்பு

வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று (11-09-26) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாரத்தில் 5 நாள்கள் மட்டும் வேலை, ஓய்வூதியத்தை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி கணக்கீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்த பேச்சுவார்த்தையடுத்து, ஒன்றிய அரசு தரப்பில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. அதனால், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரூபம் ராய் நேற்று (10-09-26) தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைநிறுத்தத்தால், நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும். இன்று வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அடுத்து வரும் 2 நாட்களும் வங்கி விடுமுறை நாட்களாகும். அதே போல, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 14 அன்று விடுமுறை உள்ளது. இதனால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  

இந்நிலையில், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்கவில்லை என்றால், வங்கியின் அரையாண்டு விடுமுறையையொட்டி, செப். 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.   

Source link