எல்லாம் மாறியது அந்த 2 ஓவரில்தான்: புலம்பிய சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் | IPL 2026

சென்னை சூப்பர் கிங்ஸ்– சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஐதராபாத் 194 ரன்கள் சேர்த்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்கியது.

ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சிஎஸ்கே-வால் ரன்கள் அடிக்க முடியவில்லை. இதனால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான், டெவால்டு பிரேவிஸ் களத்தில் இருந்தனர். அப்போது சிஎஸ்கே-வுக்கு 60 பந்தில் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 11-வது ஓவரை எசான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சர்பராஸ் கானை வீழ்த்தினார். அடுத்த ஓவரை ஷிவாங் குமார் வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து டெவால்டு பிரேவிஸை வீழ்த்தினார். இந்த இரண்டு ஓவர் சிஎஸ்கே-வுக்கு பின்னடைவாக அமைந்தது.

தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பவர்பிளே சென்ற விதத்தைப் பார்க்கும்போது, ​​எங்கள் பந்து வீச்சை பொறுத்தவரை நான் சுமார் 220 அல்லது 230 ரன்களை எதிர்பார்த்தேன். ஆனால் 30 ரன்களைக் குறைத்தது ஒரு சிறந்த பந்துவீச்சு முயற்சி. இந்த மாதிரியான மைதானத்தில், இந்த மாதிரியான பிட்சில், எந்த நாளிலும் நான் 200 ரன்களுக்கும் குறைவான இலக்கை ஏற்று கொண்டிருப்பேன். (ஒரு கட்டத்தில், தேவைப்படும் ரன் விகிதம் 8 ஆக குறைந்திருந்தது. மேலும் 6 விக்கெட்டுகள் கையில் இருந்தன. 10 ஓவர்களில் சுமார் 84 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அதன்பிறகு, ஓரிரு பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதும், எதிரணியினர் ஆட்டத்தில் இல்லாதவாறும், அழுத்தத்தில் இல்லாதவாறும் பார்த்து கொள்வதுதான் முக்கியமாக இருந்தது. ஆனால், அதற்குப் பிறகான ஓரிரு ஓவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டன. 10 ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்த 2 ஓவர்களில் நாங்கள் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம். எனவே, அது அவர்களுக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். அதில் இருந்துதான் உத்வேகம் மாறத்தொடங்கியது.

டெத் ஓவர்களில் ஓவருக்கு 12 அல்லது 13 ரன்களைத் துரத்துவது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். அதனால், ஐதராபாத் அணியினரை பாராட்ட வேண்டும். அவர்கள் கடைசி ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்து வீசினார்கள்.

பந்துவீச்சு தொடர்ந்து மூன்று போட்டிகளாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றும் கூட, பவர்பிளேக்குப் பிறகு அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். பவர்பிளேயில் கூட, அபிஷேக் அற்புதமாக பேட் செய்தார் என்று நான் உணர்ந்தேன். அவர் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார். நாங்கள் எந்தவொரு தளர்வான பந்துகளையும் வீசவில்லை, மிகச் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம். அதற்கு என் பாராட்டுகள்.

ஆனால் அதன்பிறகும் எங்களுக்கு அந்த உத்வேகம் கிடைத்தவுடன் நாங்கள் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். ஜேமி (ஓவர்டன்), குர்ஜப்நீத் சிங், நூர் அகமது மற்றும் இறுதியில் அதை நிறைவுசெய்த அன்ஷுல் கம்போஜ் என அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்தனர். அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

Source link