ராகுலுக்கு நாய் தான் முக்கியம்!

புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை தொடர்பாக, பா.ஜ., அரசு கொண்டு வந்த மசோதாக்கள் குறித்து, ‘இண்டி’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடந்தது. இது, பெரிய அரசு பங்களா. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம், காங்., தலைவர்களிடையே இப்போது பேசு பொருளாகி உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தார் ராகுல். ஆனால், தனியாக வரவில்லை. கூடவே, அவரது வளர்ப்பு நாயையும் அழைத்து வந்தாராம். அந்த நாய், ‘ஜேக் ருசல் டெரியர்’ என்ற வகையைச் சார்ந்தது. அதன் செல்லப் பெயர், ‘பிடி’

ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார். அவரது நாய், வெளியே உள்ள புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. ஆலோசனையில் பங்கேற்றாலும், ராகுலின் பார்வை கண்ணாடியைத் தாண்டி புல்வெளியில் உள்ள தன் நாய் மேலேயே இருந்தது.

‘பிடி’யை உள்ளே கொண்டு வர தன் பாதுகாவலரிடம் கூறினாராம் ராகுல். ‘ஆலோசனை கூட்டம் நடக்கும் இடத்தில் நாய் எதற்கு?’ என, சிலர் சொல்ல, ராகுல் வெளியே சென்று நாயோடு கொஞ்சி விளையாடினாராம். மற்றவர்களிடம், தன் நாயின் பெருமை பேசிக்கொண்டிருந்தாராம். சிறிது நேரத்திலேயே புறப்பட்டு விட்டாராம் ராகுல்.

கூட்டத்தில், ‘பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும்’ என, அனைத்து முக்கிய முடிவுகளையும், கூட்டணி தலைவர்களுடன் பேசி கார்கே முடிவெடுத்தாராம்.

‘ராகுலுக்கு, அவரது நாய் தான் பொழுதுபோக்கு’ என, ஒரு காங்கிரஸ்காரர் கூறினாராம். அதற்கு, அருகில் இருந்தவரோ, ‘ராகுலுக்கு அரசியலே ஒரு பொழுதுபோக்கு தான்’ என சொல்ல, பக்கத்திலிருந்த அனைவரும் சிரித்தனராம்.

Source link