தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆருக்கு மதுரையில் சிலை: தவெக – எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: ”தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையருக்கு, மதுரையில் வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும்,” என, மதுரை கிழக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ., கார்த்திகேயன் கோரிக்கை விடுத்தார்.


சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மதுரையில் பல கிராமங்களில், ஜல்லிக்கட்டு விளையாட்டு உள்ளூர் அளவில் மக்களின் விழாவாக நடத்தப்படுகிறது. எனவே, பாரம் பரிய இடங்களில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம், நல வாரியம் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பாதுகாப்பு மையம் அமைப்பதோடு, காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் முன்னோட்டமாக, மதுரையில் நடந்த ‘நத்தம் கணவாய் போர்’ முக்கியத்துவம் பெறுகிறது. இதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், மதுரை சத்திரப்பட்டியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்.

‘தினமலர்’ நாளிதழ் நிறுவனரும், பத்திரிகை உலக ஜாம்பவானுமான டி.வி.ராமசுப்பையர், அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர்கள் அழகு முத்து கோன், வ.உ.சிதம்பரனார் ஆகியோருக்கு, அரசு சார்பில் மதுரையில் வெண்கல சிலைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link