கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: ‘ஈரான் போர் முடிவுக்கு வரும்; கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியடையும்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அயர்லாந்து நாட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு உள்ளார். இது முழுக்க முழுக்க அரசுமுறைப் பயணம் அல்ல; டப்ளின் நகரில், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேசிய டிரம்ப், பின்னர் கவுண்டி கிளேர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ‘ஐரிஷ் ஓபன்’ கோல்ப் போட்டியை ரசிப்பதற்காகச் சென்றார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அயர்லாந்தும், வட அயர்லாந்தும் இணைந்து ஒற்றை நாடாக மாறுவதை பார்க்க விரும்புகிறேன். அது அற்புதமாக இருக்கும். கனடா நம்முடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது; ஆனால் அவர்கள் தற்போது அதற்குத் தயாராக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்த உடனேயே ஈரான் போர் முடிவுக்கு வரும்.

ஈரான் போர் முடிவுக்கு வந்த பிறகு, கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். மத்திய கிழக்கில் சண்டை முடிவடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், போர் முடிவுக்கு வருவது குறித்தும் ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் பேசுவது இது இரண்டாவது முறையாகும்.

Source link