சல்மான் கான் தந்தையை ஏமாற்றிய கும்பல் கைது: பிரபலங்களிடம் தங்கம் இருப்பதாக கூறி மோசடி

குருகிராம்:மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பலரை ஏமாற்றிய தங்க வேட்டை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 2 கோடி ரூபாய் பணம், 678 கிராம் தங்கம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து, ஹிதேஷ் யாதவ் என்ற போலீஸ் அதிகாரி கூறியதாவது:

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சோலாங்கி பிரபுபாய் குல்ஷன்பாய். இவர் தான் இந்த கும்பலின் தலைவராக செயல்பட்டுள்ளார். இவரின் மனைவி, குஜராத்தில் உள்ளாட்சி அமைப்பு ஒன்றில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

இவரின் கீழ், டில்லியை சேர்ந்த பங்கஜ் சர்மா, குஜராத்தை சேர்ந்த மணிஷ் ஷா, ஈஸ்வர் மார்வாடி ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த கும்பல், வசதியானவர்களை குறி வைத்து, அவர்களை நம்ப வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.

சாதாரண ஏழை தொழிலாளர்களை நாடும் இவர்கள், அவர்களிடம் தங்க குவியலை கொடுத்து அனுப்பி, பிரபலங்களை நம்ப வைப்பர். அப்போது, அந்த தொழிலாளர்கள் தோண்டும் போது, இந்த தங்க குவியல் கிடைத்ததாக கூறுவர்.

அதை நம்பிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தை சலிம் கான், ஆதித்யா பஞ்சோலி போன்றோர், பல லட்சம் ரூபாயை அட்வான்சாக கொடுத்து ஏமாந்துள்ளனர்.

அட்வான்ஸ் தொகையை பெறும் தொழிலாளர்கள், அந்த பணத்தை இந்த கும்பலிடம் கொடுத்து விடுவர். அதற்கான கட்டணமாக சிறிய தொகை ஒன்றை அந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கும் இவர்கள், தங்க நகைகளை கொடுப்பது போல நடித்து, பிரபலங்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

இவர்களின் மோசடித்தனங்களை அம்பலப்படுத்த முடியாமல், பிரபலங்கள் முடங்கி போவர். அதன் பின், இந்த கும்பலை சேர்ந்தவர்கள் காணாமல் போய் விடுவர்.

இப்படி பலரை ஏமாற்றிய இந்த கும்பல், டில்லியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களின் வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்த, 2 கோடி ரூபாய் ரொக்கம், 678 கிராம் தங்கம் போன்றவற்றை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

இந்த கும்பலின் நால்வரை கைது செய்துள்ள போலீசார், அவர்களின் மோசடித்தனத்திற்கு பலியானவர்களின் பட்டியலை பார்த்து மலைத்தனர்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

Source link