புதுடில்லி: மஹாராஷ்டிராவில் டிசிஎஸ் நிறுவத்தில் நடந்த கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் சீண்டல் குறித்து அறிக்கை அளிக்கும்படி போலீஸ் கமிஷனர், டிஜிபி மற்றும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்துக்கு தேசிய மனித உரிமைகள் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நாசிக்கில், பிரபல டிசிஎஸ் நிறுவனத்தின் பி.பி.ஓ., செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் 25 – 32 வயதுடைய பெண்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கிருந்த ஊழியர்கள் பலர், பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக, ஒன்பது பெண் ஊழியர்கள் போலீசில் புகாரளித்தனர். அதில், ‘முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.
‘ ஹிந்து தெய்வங்களை அவதுாறாக பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்துவது போன்ற செயல்களும் நிறுவனத்தில் நடந்தன. மறுக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.’உயர் அதிகாரிகள் இந்த கொடுமைகளை தடுக்காமல், அந்த செயல்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தினர்’ என, தெரிவித்திருந்தனர்.அந்நிறுவனத்தில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டதும், அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பெண்களுக்கு தொல்லை தந்ததும் உறுதியானது. இந்த விவகாரத்தில், நிறுவனத்தில் பணியாற்றிய ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மனிதவள துறை அதிகாரி நீடா கானை தேடி வந்தனர். ஆனால், தற்போது கர்ப்பமாக உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும் எனக்கூறி நாசிக் நீதிமன்றத்தில் நீடா கான் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதமாற்றம் விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் கமிஷன், நாசிக்கில் உள்ள ஐ.டி., – பி.பி.ஓ., நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொள்ள உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளது.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக நாசிக் போலீஸ் கமிஷனர், தொழிலாளர் கமிஷனர், டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.
அதில், மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தேசிய மனித உரிமைகள் கமிஷன் தெரிவித்துள்ளது.
