புதுடில்லி : ” நாட்டின் பெண்கள் அதிகாரத்திற்கும், அவர்களை பெருமைப்படுத்தவும், இதுவே சிறந்த வாய்ப்பு. இந்த புதிய வாய்ப்புகளை தவற விடாதீர்கள்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மசோதாக்கள் குறித்து பரப்பப்பட்டதவறான புரிதல்களுக்கு ஏற்ற பதில் அளிக்கப்பட்டது. சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு தசாப்தங்களாக, நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எனும் விவகாரத்தை சுற்றி பெருமளவில் அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வந்துள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக திகழும் பெண்களுக்கு, அவர்களுக்கான உரிமைகள் நிச்சயமாக கிடைக்க வேண்டிய தருணம் இது.
நாடு சுதந்திரம் பெற்று பலஆண்டுகள் கடந்துவிட்ட போதும், முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் இருப்பது ஏற்புடையதல்ல. லோக்சபாவில் நடக்கும் ஓட்டெடுப்பில், உரிய முறையில் ஆலோசித்து முழுமையான உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒரு முடிவை எடுத்து பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும்.
பெண்கள் சக்தியின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எதையும் எம்பிக்கள் செய்யக்கூடாது. நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் கண்கள் நம் அனைவர் மீதும்,நமது நோக்கங்கள் மீதும் பதிந்துள்ளன. தங்களின் தாயார், சகோதரிகள், மகள்கள், மனைவி ஆகியோரை மனதில் வைத்து உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.
நாட்டின் பெண்கள் அதிகாரத்திற்கும், அவர்களை பெருமைப்படுத்தவும், இதுவே சிறந்த வாய்ப்பு. இந்த புதிய வாய்ப்புகளை தவற விடாதீர்கள். ஒரு மித்த ஆதரவுடன் இம்மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் இன்னும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவார்கள். நாட்டின் ஜனநாயகம் இன்னும் அதிகாரம் பெறும். அனைவரும் இணைந்து வரலாற்றை படைப்போம். நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவு இருக்கும் பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வோம் இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
