சென்னை: மிசா சட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சிறையில் இருந்தது குறித்து சந்தேகம் வருகிறதா, எனக்கு கூடதான் நீ யாருக்கு பிறந்தேன்னு சந்தேகம் வருது, நான் கேட்கவா என அமைச்சர் நிர்மல் குமாரை, திமுக எம்பி ஆ.ராசா ஒருமையில் விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாடு சட்டசபைக்கு என ஒரு வரலாறு இருக்கிறது. முதல்வராக கருணாநிதி இருந்த போதும், எம்ஜிஆர் இருந்த போதும் ஆக்கப்பூர்வமான முதிர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பார்கள்.
சிற்றரசு பேசும் போது மகா நடிகர் என்று சொன்னார், ஆனால் அவர் மகா நடிகர் இல்லை, தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா என பாடியவர் மகா நடிகனா? சினிமாவின் மூலம் ஒரு நடிகனாக மக்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? மக்களுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் விஷயம். நீங்கள் மகா நடிகர் அல்ல, மகா அயோக்கியன்.
கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம், மூளையில் இருக்கக் கூடாது, இப்போது ஒருவர் இதற்காக சிறைக்கு போகவில்லை, அதற்காக போகவில்லை என்கிறார். எனக்குக் கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா, நீ என் தலைவனின் தியாகத்தை சந்தேகிக்கும் போது நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். முடிந்தால் வழக்கு போட்டுக் கொள்.
23 வயதான ஸ்டாலினை கைது செய்து தாடையை உடைத்தார்கள். அவரை காப்பாற்ற சென்ற சிட்டி பாபு கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலினை சந்திக்க தந்தை கருணாநிதி போகிறார். அப்போது ஸ்டாலினின் முகம் வாடியிருக்கிறது.
ஸ்டாலின் , கருணாநிதியிடம் சொல்கிறார், “அப்பா எனக்கு ஏற்பட்ட காயங்களை விசாரிக்க நீங்கள் வர வேண்டாம். நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் அடி விழுந்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்தி நாட்டை காப்பாற்றுங்கள்” என சொன்னவர் ஸ்டாலின். மிசாவில் கைது செய்யப்பட்டு இப்போது வரை உயிரோடு இருப்பவர்கள் அனைவரும் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டது உண்மை என்கிறார்கள்.
எங்கள் கட்சி சார்பில்லாமல் நடுநிலையாளராக இருக்கக் கூடிய தோழர் தியாகு, ஸ்டாலின் அடிவாங்கியது எல்லாம் உண்மை என்கிறார். கொஞ்சமாவது நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள். நாகரிகத்தின் உச்சம்தான் திமுக என ஆ.ராசா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை அறிவுறுத்தியது.
மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானதற்கான Detention copy யாரிடமாவது உள்ளதா, அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக அமைச்சர்களையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர்.
