சென்னை: நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரித்துள்ள மின் தேவையை சமாளிக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை; இந்த ஆண்டு கோடை காலம் எதிர்பாராத விதமாக நீடித்ததாலும், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததாலும், மின்தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது.
மின் விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
