சேப்பாக்கம் போட்டியில் சூதாட்டம்: கனடா அணியிடம் ஐ.சி.சி., விசாரணை

புதுடில்லி: சென்னை, சேப்பாக்கத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கனடா அணியிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தியா, இலங்கையில், ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கனடா அணி பங்கேற்ற ஒரு சில போட்டிகளில் ‘மேட்ச் பிக்சிங்’ சூதாட்டம் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள், கனடாவின் புலனாய்வு நிகழ்ச்சியான ‘தி பிப்த் எஸ்டேட்’ தயாரித்த ‘ஊழல், குற்றம் மற்றும் கிரிக்கெட்’ என்ற 43 நிமிட ஆவணப்படத்தில் வெளியானது.

குறிப்பாக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் (பிப். 17) கனடா அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. இப்போட்டியில் கனடா அணி கேப்டன் தில்பிரீத் பாஜ்வா வீசிய 5வது ஓவரில் ‘மேட்ச் பிக்சிங்’ நடத்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் பந்தை ‘நோ-பாலாக’ வீசிய இவர், 3வது பந்தில் 2 ‘வைடு’ ரன் வழங்கினார். இந்த ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்தார். தவிர, முதலிரண்டு ஓவரில் முறையே 14, 15 ரன் விட்டுக்கொடுக்கப்பட்டது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது. ‘மேட்ச் பிக்சிங்’ மட்டுமின்றி வீரர்கள் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆவணப்படத்தின் அடிப்படையில் ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவு, கனடா அணியிடம் விசாரணையை துவக்கி உள்ளது.

Source link