நமது நிருபர்
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.
பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு தபால் ஓட்டளிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் இருக்கும் சிக்கலான நடைமுறைகளால் பலர், ஓட்டளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதிகாரிகள் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை கிடையாது; ஆனால் சாதாரண கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்.ஐ., நிலையில் இருப்பவர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியது.
இவர்களது பிரச்னை பற்றி, உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இது பற்றி மயிலாடுதுறை மாவட்ட போலீசார் சிலர் கூறியதாவது: மயிலாடுதுறை புதிய மாவட்டத்தில் எஸ்பி. அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 500 போலீசார் மற்றும் ஆயுதப்படையில் 120 போலீசார் என மொத்தம் 620 போலீசார் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளியூர் வாக்காளர்களாக உள்ளனர். பணியில் உள்ள இவர்கள் எங்கு ஓட்டு உள்ளதோ அங்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை உள்ளது
அதனால் தேர்தல் கமிஷன் போலீசார் தபால் ஓட்டு முறையில் தங்களது ஓட்டுகளை செலுத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி தபால் ஓட்டு போடும் போலீசார் நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்குள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில் 10 சதவிகிதம் பேர் வெளியூர் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அலுவல் பணிக்கு சென்றுள்ளனர் இதனால் போலீசார் குறித்த நாட்களில் தபால் ஓட்டுகளை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்னை, குறிப்பிட்ட ஒரு மாவட்டம் மட்டும் தான் என்றில்லை. தமிழகம் முழுவதுமே இதே பிரச்னையால் பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தபால் ஓட்டுகளை செலுத்த முடியாத நிலை இருக்கிறது. போலீசாரும் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில், ஆங்காங்கே அவர்கள் பணியில் உள்ள இடத்திலேயே தபால் ஓட்டுகளை செலுத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.
